Posts tagged ‘பண்டிகை பலகாரம்’

ரவா லட்டு (Rava Laddoo/ Suji Laddoo/ Sooji Laddoo)

அன்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்… பண்டிகை, திருநாள் என்றாலே கோலம், கடவுள் வழிபாடு, புது ஆடை, இனிப்புகள் இவையெல்லாம் இல்லாமல் இருக்காது. நான் இந்த புதுவருடப்பிறப்பிற்கு செய்திருக்கும் ஸ்பெஷல் ஸ்வீட் ரவாலட்டு. அம்மா நிறையதடவை தீபாவளிக்கு ரவா லட்டு செய்து கொடுத்திருக்காங்க. தீபாவளிக்கு இன்னும் ரெண்டு, மூணு நாட்கள் இருக்கும்போதே அம்மா ரவா லட்டு, முறுக்குன்னு பலகாரங்கள் செய்ய ஆரம்பிச்சிருவாங்க. அன்றிலிருந்தே எங்களுக்கும் பண்டிகை குதூகலம் தொற்றிக்கொள்ளும். ரொம்ப ஈஸியாக ஸ்வீட்செய்யணும், ஆனா நாள்பட வைத்திருந்து சாப்பிடனும்னு நினைக்கும்போது – அதற்கான என்னோட பெஸ்ட் சாய்ஸ் – இந்த ரவாலட்டு தான்.

தேவையான பொருட்கள்:

ரவை – 1 கப்
(semolina/suji/sooji/upma rava)
சர்க்கரை – 1 கப்
தேங்காய்த்துருவல் – 1 கப்
ஏலக்காய் – 7
நெய் – 3 டேபிள் ஸ்பூன்
முந்திரிப்பருப்பு – 10

செய்முறை:

வானலியில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய்விட்டுச் சூடாக்கவும். இதில் ரவையைச் சேர்த்து மிதமான வெப்பத்தில் லேசாக வறுத்துக்கொள்ளவும். வறுத்த ரவையை தனியே எடுத்துவைக்கவும். வானலியில் நெய்/எண்ணெய் விடாமல் தேங்காய்த்துருவலை லேசாக வறுத்துக்கொள்ளவும். சர்க்கரையையும், ஏலக்காயையும் பொடியாக திரித்துக்கொள்ளவும். வானலியில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய்விட்டு முந்திரிப்பருப்பை லேசான பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும். நெய்யிலிருந்து வறுத்த முந்திரியை வடித்தெடுத்து தனியே வைக்கவும். எஞ்சியுள்ள ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யை வானலியில்விட்டுச் சூடாக்கவும். இதனுடன் பொடிசெய்த சர்க்கரை, ஏலக்காய் சேர்க்கவும். சர்க்கரை மூழ்கும் அளவிற்கு மட்டும் தண்ணீர் சேர்த்து கொதிக்கவைக்கவும். தண்ணீர் கொதித்து பாகுபோல் திரண்டுவரும்போது ரவையும், தேங்காய்த்துருவலும் சேர்த்து கிளறிவிட்டுக்கொண்டே இருக்கவும். ரவை, சர்க்கரை, தேங்காய் எல்லாம் ஒன்றாகக்கலந்து உருண்டைபிடிக்கும் பதத்திற்கு வந்ததும் வறுத்த முந்திரிப்பருப்பைச் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கிவிடவும். லேசாக ஆறவைக்கவும்.(உருண்டைபிடிக்கும் பதம் இதற்கு மிகவும் முக்கியம் – ரொம்ப குழகுழப்பான கூழ் போன்றோ / ரொம்பவும் வறண்டு ரவையும், சர்க்கரையும் சேர்த்து கட்டிகளாக மாறும் தன்மையுடனோ இருக்கக்கூடாது.) லேசான சூட்டுடன் இருக்கும்போதே உருண்டைபிடிக்க ஆரம்பிக்கவும். உருண்டைபிடிக்க – பிளாஸ்டிக்தாளினை (8″ X 8″) அளவிலான சதுர துண்டுகளாக நறுக்கி தயாராக வைத்துக்கொள்ளவும். பிளாஸ்டிக்தாளினை விரித்துவைத்து,அதன்மேல் ரெண்டு டேபிள்ஸ்பூன் அளவிலான லட்டு கலவையை வைக்கவும். பிளாஸ்டிக்தாளின் ஓரங்களை ஒன்றாகச் சேர்த்து ஒருகையில் பிடித்துக்கொண்டு, மறுகையால் அடிப்பகுதியில் உள்ள லட்டு மாவை இறுக்கி திருகிக்கொண்டே வரவும். இப்போது  உள்ளே பந்து போன்று லட்டு உருண்டுவிடும். இதேபோல் எல்லாவற்றையும் உருண்டைகளாக பிடித்துக்கொள்ளவும். ரவாலட்டு தயார்.

  • இதை பார்டி/ ஈவினிங் ஸ்நாக்கிற்கெனவும்  தயாரித்துக்கொள்ளலாம்.
  • குளிர்ந்த தண்ணீரில் கையை நனைத்துவிட்டு உள்ளங்ககையில் வைத்தும் லட்டு பிடிக்கலாம்.
  • சர்க்கரையின் அளவு அவரவர் விருப்பத்திற்கேற்ப கூட்டியோ/ குறைத்தோ சேர்த்துக்கொள்ளவும்.
  • முந்திரிப்பருப்புடன் பிஸ்தா,பாதாம்பருப்பு, உலர்ந்த திராட்சை வறுத்தும்  சேர்த்துக் கொள்ளலாம்.
  • ரவையும், தேங்காய்துருவலும் நிறம்மாறாத அளவுக்கு லேசாக வறுக்கவும்.
  • உலர்ந்த தேங்காய்த்துருவல் (dry coconut powder) பயன்படுத்திச் செய்யும்போது தேங்காயை வறுக்கத் தேவையில்லை.பிரஷ்ஷான தேங்காய்த்துருவல் பயன்படுத்தும்போது லேசாக வறுத்துச் சேர்க்க லட்டு நீண்டநாள் கெடாமல் இருக்கும்.

மொத்தமாக லட்டு செய்து காற்று புகாத டப்பா/ ப்ரீசர் பைகளில் (ziploc bags) ப்ரிட்ஜில் வைத்திருந்து மாதக்கணக்கில் கூட பயன்படுத்திக்கொள்ளலாம்.

சித்திரைத் திருநாள் / தமிழ் வருடப்பிறப்பை ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி கொண்டாடுகின்றனர். அரிசி,புது ஆடை,நகைகள்,கனிவகைகள் எல்லாம் கடவுள் முன்னிலையில் கண்ணாடி முன் படைத்து காலையில் தூங்கி எழுந்ததும் அதன்முன் கண்விழிக்கும்படி என் வீட்டுப் பெரியோர்கள் கூறுவார்கள். எனக்கு சித்திரைத் திருநாள் காலைப்பொழுது இந்தமுறையில் தான் விடியும். உங்களுக்கு எப்படி ?  நீங்கள் எப்படி கொண்டாடுவீர்கள்…?

Advertisements

ஏப்ரல் 14, 2011 at 4:39 பிப 1 மறுமொழி


வணக்கம்! நீங்கள் எனது

  • 121,373 விருந்தாளி